

கேரளாவில், ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் : ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீவிரம்
தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை, கற்பகம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் , பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே உள்ள, விளையோடி ஆழியாற்றின் குறுக்கே அமைந்து உள்ள சண்முகம் கிராஸ்வே பாலத்திற்கு அருகில் குளிக்கச் சென்று உள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும் போது ராமேஷ்வரத்தை சேர்ந்த கெளதம் மற்றும் நெய்வேலியை சேர்ந்த அருண் இருவரும் சூழலில் சிக்கிக் கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைபுத் துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியோடு மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சூழலில் சிக்கிய கெளதம் மீட்கப்பட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அருணை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கெளதமின் நிலை கவலைக் கிடமாக இருக்கிறது. மாணவர்கள் குளிக்கும் போது அருண் எங்கே ? என மாணவிகள் கேட்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
சூழல் நிறைந்த பகுதி என்பதால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தும், மாணவர்கள் சூழலில் சிக்கியது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
